ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் (Baisaran Meadows) கடந்த 2025 ஏப்ரல் 22 அன்று சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரப் பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில், தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் அடுக்கடுக்கான அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத ரீதியாக மக்களைப் பிரித்து, திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு உள்ளூர்வாசி உட்பட 26 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில், பாகிஸ்தான் மண்ணில் இருந்து இயங்கும் லஷ்கர்-ஏ-தொய்பா (LeT) மற்றும் அதன் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (TRF) ஆகியவற்றின் சதிப் பின்னணியை என்.ஐ.ஏ. அம்பலப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்ட சதித் திட்டம்
சுமார் 1,597 பக்கங்கள் கொண்ட இந்த விரிவான குற்றப்பத்திரிகையில், லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர் ஹஃபீஸ் சயீத் மற்றும் டிஆர்எஃப் அமைப்பின் தலைவர் ஹபிபுல்லா மாலிக் (என்ற சஜித் ஜாட்) ஆகியோர் இந்தத் தாக்குதலுக்கு முதன்மையாகத் திட்டமிட்டது கண்டறியப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்துகொண்டே சஜித் ஜாட் இந்த ஆபரேஷனைக் கட்டுப்படுத்தி, உள்ளூர் கூட்டாளிகள் மூலம் பயங்கரவாதிகளுக்குத் தேவையான தகவல் தொடர்பு வழிகாட்டுதல்களையும், ஆயுதங்களையும் வழங்கியுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் ‘ஆபரேஷன் மகாதேவ்’ மூலம் ஒழிப்பு
இந்தத் கொடூரத் தாக்குதலை ராணுவச் சீருடையில் வந்து முன்னெடுத்த மூன்று முக்கியப் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்:
- பைசல் ஜாட் (என்ற சுலைமான் ஷா)
- ஹபீப் தாஹிர் (என்ற ஜிப்ரான்)
- ஹம்சா ஆப்கானி
இவர்கள் மூவரும் தாக்குதலுக்குப் பிறகு தப்பியோடிய நிலையில், கடந்த ஜூலை 29 அன்று ஸ்ரீநகர் அருகே உள்ள தச்சிகாம் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் மகாதேவ்’ (Operation Mahadev) கூட்டு அதிரடிச் சோதனையில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் கொடுத்து அடைக்கலம்; சீனா, ஹமாஸ் கோணத்தில் விசாரணை
என்.ஐ.ஏ விசாரணையில் உள்ளூர்வாசிகள் இருவர் இந்த பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு ஜூன் மாதமே கைது செய்யப்பட்டனர். கைதான பர்வைஸ் அகமது மற்றும் பஷீர் அகமது ஜோதர் ஆகியோருக்குப் பயங்கரவாதிகள் உணவு மற்றும் தங்குமிடம் வழங்கியதற்காக வெறும் ₹3,000 பணம் கொடுத்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் சில புதிய சர்வதேசப் பின்னணிகளையும் என்.ஐ.ஏ முதன்முறையாகத் தொட்டுள்ளது:
- சீனத் தொடர்பு: தாக்குதலுக்கு முன்னதாகப் பஹல்காம் பகுதியில் உளவு (Recce) பார்ப்பதற்காகப் பயங்கரவாதிகள் பயன்படுத்திய ‘கோப்ரோ’ (GoPro) கேமரா, சீன விநியோகஸ்தர் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சீனாவிடம் என்.ஐ.ஏ முறைப்படி அணுக திட்டமிட்டுள்ளது.
- ஹமாஸ் கோணம்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுக்கும், காசாவைச் சேர்ந்த ஹமாஸ் (Hamas) மற்றும் அல்-கொய்தா போன்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்தும் என்.ஐ.ஏ தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு எதிராகப் போர் தொடுத்தல் மற்றும் சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் குற்றவாளிகள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


