நாக்பூர்: வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களுக்கு மாற்றாக, குறைந்த செலவில் இயங்கக்கூடிய முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய ‘எத்தனால் சமையல் அடுப்பு’ தொழில்நுட்பத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தியுள்ளார்.

நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்த புதிய தொழில்நுட்பம் நடுத்தர குடும்பங்களின் சமையல் செலவை பெருமளவு குறைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

7% தண்ணீருடன் கலந்த எத்தனால்: இந்த புதிய அடுப்பின் சிறப்பம்சம் குறித்துப் பேசிய அமைச்சர், “எத்தனால் மற்றும் தண்ணீரை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து இந்த அடுப்பில் பயன்படுத்தலாம். குறிப்பாக, எத்தனாலுடன் 7 விழுக்காடு (7%) தண்ணீரை மிக்ஸ் செய்வதன் மூலம், எல்பிஜி சிலிண்டரில் வருவது போன்றே சமையலுக்குத் தேவையான நீல நிற சுடர் (Flame) உருவாகிறது. இது சாதாரண சமையல் கேஸை விட மிகக் குறைந்த செலவைக் கொண்டது,” என்று விளக்கினார்.

மண்ணெண்ணெய் மற்றும் சிலிண்டர்களை விடப் பாதுகாப்பானது: “இந்த எத்தனால் அடுப்பு எல்பிஜி போன்றே திறம்பட எரியக்கூடியது. மேலும், இது தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய் மற்றும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை விடப் பாதுகாப்பானது; சுற்றுப்புற சூழலுக்கு எவ்வித மாசும் ஏற்படுத்தாது,” என்றும் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார்.

பொருளாதாரப் பின்னணி மற்றும் நோக்கம்: இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 87 விழுக்காட்டை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் செலவாகிறது.

  • இறக்குமதி சுமை குறையும்: வாகனங்களுக்கு 20% எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை வெற்றிகரமாகக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, இப்போது சமையல் அறையிலும் எத்தனகாலை புகுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
  • விவசாயிகளுக்கு லாபம்: எத்தனால் என்பது கரும்பு, சோளம் மற்றும் விவசாயக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு ஆல்கஹால் பயோ-பியூயல் (Biofuel) என்பதால், இதன் பயன்பாடு அதிகரிக்கும் போது நாட்டின் விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த சுற்றுச்சூழல் நட்பு எத்தனால் அடுப்பு, விரைவில் வணிகரீதியாகச் சந்தைக்கு வரும்போது பொதுமக்களுக்கு எல்பிஜி சிலிண்டர் விலையுயர்வுக்கான ஒரு சிறந்த மாற்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version