சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தைச் சமாளிக்கவும் G7 நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்) ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளன. அதன்படி, தங்கள் நாடுகளின் அவசர கால எண்ணெய் இருப்பிலிருந்து (Strategic Petroleum Reserves) சுமார் 30 சதவீதத்தை, அதாவது 400 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயைச் சர்வதேச சந்தையில் விற்கப் பரிசீலித்து வருகின்றன.
ஈரான் மீதான அச்சுறுத்தல் மற்றும் மத்திய கிழக்கு பதற்றங்களால் எண்ணெய் விலை எகிறிக்கொண்டிருந்த சூழலில், G7 நாடுகளின் இந்தத் திடீர் அறிவிப்பு சர்வதேச சந்தையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. இந்தச் செய்தி வெளியான அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 15 டாலர் வரை அதிரடியாகச் சரிந்து, 105 டாலருக்குக் கீழ் வர்த்தகமாகத் தொடங்கியது. இது நுகர்வோர் நாடுகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
சந்தையில் தட்டுப்பாட்டைப் போக்கி, விலையைச் சீராக வைத்திருப்பதே இந்த மெகா திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே தங்கள் இருப்பைத் திறந்துவிடத் தயாராக உள்ள நிலையில், இந்த நடவடிக்கை ஓபெக் (OPEC) நாடுகளின் ஆதிக்கத்தைச் சற்றே குறைக்கக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர். எண்ணெய் விலை குறைவதால் இந்தியா போன்ற இறக்குமதி நாடுகளுக்குப் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.


