சென்னை: தமிழ்நாடு தீயணைப்புத் துறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த திடீர் ராஜினாமா அரங்கேறியிருப்பது அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையை நவீனப்படுத்துதல், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துதல் மற்றும் கட்டிடங்களுக்கான தீயணைப்புத் தடையில்லா சான்றிதழ் (Fire NOC) வழங்கும் நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல் போன்ற முக்கிய நோக்கங்களுக்காகத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் “தீயணைப்புத் துறை ஆணையம்” (Fire Commission) முறைப்படி உருவாக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக, தமிழகக் காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநரான (DGP) ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

அரசாணையின்படி இந்த ஆணையம் செயல்பட்டு வந்த நிலையில், தலைவர் பதவியிலிருந்து சங்கர் ஜிவால் திடீரென விலகியுள்ளார். அவருடன் இணைந்து ஆணையத்தின் முழுநேர மற்றும் பகுதிநேர உறுப்பினர்களாகப் பணியாற்றி வந்த சத்யமூர்த்தி, நமச்சிவாயம் மற்றும் இக்ராம் ஆகியோரும் தங்களது பதவிகளை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த ஒட்டுமொத்த ராஜினாமாவுக்கான காரணம் குறித்துத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

“தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, புதிய அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஏற்பவும், நிர்வாகச் சீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும் இந்த ராஜினாமாக்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை முறைப்படி அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.”

தமிழகக் காவல்துறையில் மிக நீண்ட அனுபவம்கொண்ட சங்கர் ஜிவால், சென்னை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் தமிழக டி.ஜி.பி. எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணையத்தின் ஒட்டுமொத்த நிர்வாகக் குழுவும் ஒரே நேரத்தில் பதவிலகியுள்ளதால், தீயணைப்புத் துறை ஆணையத்திற்குப் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளில் புதிய அரசு தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது._

Share.
Leave A Reply

Exit mobile version