லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் கூட்டு முயற்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் 2026 ஃபீஃபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரில், நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் இந்திய வம்சாவளி வீரரான சர்ப்ரீத் சிங் (Sarpreet Singh) புதிய உலக சாதனையுடன் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே களம் காணும் முதல் சீக்கிய கால்பந்து வீரர் என்ற பெருமையை சர்ப்ரீத் சிங் பெற்றுள்ளார். நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் பிறந்த இவருடைய பெற்றோர், பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மற்றும் ஹோஷியார்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால், இந்திய கால்பந்து ரசிகர்கள் பலரும் இந்த உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கும், குறிப்பாக சர்ப்ரீத் சிங்கிற்கும் தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
நியூசிலாந்து அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஈரான் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் (Tie) முடிவடைந்தது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் நடுகள வீரராக (Midfielder) களம் இறங்கிய 27 வயதான சர்ப்ரீத் சிங், முழுமையாக 90 நிமிடங்களும் விளையாடி அணியின் பலமாகத் திகழ்ந்தார். கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட முழங்கால் காயம் (MCL Injury) காரணமாக உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தீவிரப் பயிற்சி மற்றும் விடாமுயற்சியால் மீண்டு வந்து அவர் இச்சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக, ஜெர்மனியின் புகழ்பெற்ற ‘பேயர்ன் முனிச்’ (Bayern Munich) கிளப் அணிக்காக விளையாடிய முதல் இந்திய வம்சாவளி வீரர் மற்றும் பன்டெஸ்லிகா (Bundesliga) தொடரில் விளையாடிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் இவர் ஏற்கனவே பெற்றுள்ளார்.
“உலகக்கோப்பையில் விளையாடும் முதல் சீக்கிய வீரர் நான் தான் என்று பலரும் கூறும்போது, என் கலாச்சாரத்தையும் என் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெரும் பெருமிதமும் பொறுப்பும் உணர்கிறேன்” என்று சர்ப்ரீத் சிங் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பையில் இந்திய அணி தகுதி பெறாத நிலையிலும், சர்ப்ரீத் சிங்கின் இந்த வரலாற்றுப் பயணம் இந்திய ரசிகர்களுக்குப் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.


