திருவனந்தபுரம்: கொச்சி கனிமவள நிறுவனம் (CMRL) தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், கேரள முன்னாள் முதலமைச்சரும் சிபிஐ(எம்) மூத்த தலைவருமான பினராயி விஜயன் வீடு உட்பட மாநிலத்தின் 10 இடங்களில் அமலாக்கத்துறை (ED) இன்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை முதல் இந்தச் சோதனைகள் ஒரே நேரத்தில் தொடங்கின.
பின்னணி என்ன?
பினராயி விஜயனின் மகள் டி. வீனாவுக்குச் சொந்தமான ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ (Exalogic Solutions) என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு, கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (CMRL) கனிமவள நிறுவனம், எவ்வித சேவைகளும் பெறாமல் சட்டவிரோதமாக ₹1.72 கோடிக்கும் அதிகமாகப் பணம் வழங்கியதாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
எங்குெங்கெல்லாம் சோதனை?
அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் இந்தச் சோதனைப் பட்டியலில் முக்கிய இடங்கள் அடங்கியுள்ளன:
- திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் தற்காலிக இல்லம் மற்றும் கண்ணூரில் உள்ள அவரது சொந்த வீடு.
- கோழிக்கோட்டில் உள்ள பினராயி விஜயனின் மருமகனும், முன்னாள் அமைச்சருமான பி.ஏ. முகமது ரியாஸின் இல்லம்.
- சிஎம்ஆர்எல் (CMRL) கனிமவள நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிரடி:
அமலாக்கத்துறையின் இந்த வழக்கிற்கு எதிராக சிஎம்ஆர்எல் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை நேற்று கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிய சில மணி நேரங்களிலேயே இந்த அதிரடிச் சோதனை அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சோதனையைத் தொடர்ந்து பினராயி விஜயனின் வீட்டின் முன்பாக சிபிஐ(எம்) தொண்டர்கள் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கேரளாவில் பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


