தோஹா: தோஹாவில் நடைபெற்ற மதிப்புமிக்க டைமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 4-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்துள்ளார். எனினும், காயத்தில் இருந்து மீண்டு வந்து பங்கேற்ற முதல் போட்டியிலேயே அவர் காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான தகுதி இலக்கை எட்டியுள்ளார்.
கம்பேக் கொடுத்த நீரஜ் சோப்ரா: கடந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு, கீழ் முதுகு வலி (Lower back injury) காரணமாக கடந்த எட்டு மாதங்களாக நீரஜ் சோப்ரா எந்தவொரு சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. நீண்ட இடைவெளி மற்றும் தீவிர சிகிச்சைக்குப் பின் நடப்பு சீசனின் தனது முதல் போட்டியில் அவர் நேற்று களம் இறங்கினார்.
4-வது இடமே கிடைத்தது: உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியின் முதல் சுற்றில் நீரஜ் வீசிய ஈட்டி ஃபவுல் (Foul) ஆனது. தொடர்ந்து இரண்டாவது சுற்றில் 82.77 மீட்டரும், மூன்றாவது சுற்றில் தனது சிறந்த முயற்சியாக 85.69 மீட்டர் தூரமும் ஈட்டி எறிந்து அசத்தினார். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் மற்ற வீரர்கள் இவரை விட அதிக தூரம் எறிந்ததால் நீரஜ் சோப்ராவுக்கு 4-வது இடமே கிடைத்தது. இதனால் அவர் நூலிழையில் பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.
காமன்வெல்த் போட்டிக்கு தகுதி: பதக்கம் வெல்லாவிட்டாலும், இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) காமன்வெல்த் போட்டிகளுக்காக நிர்ணயித்திருந்த தகுதி இலக்கான 82.61 மீட்டரை நீரஜ் சோப்ரா மிக எளிதாகக் கடந்தார். இதன் மூலம் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான தனது தகுதியை அவர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.
இலங்கை வீரர் முதலிடம்: இப்போட்டியில் இலங்கை நாட்டின் இளம் எழுச்சி நட்சத்திரமான ருமேஷ் தரங்க பத்திரகே (Rumesh Tharanga Pathirage) 88.68 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தையும், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (86.38 மீ) இரண்டாவது இடத்தையும், அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் (85.99 மீ) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான சச்சின் யாதவ் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினார்.


