சென்னை:
தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தமிழ்நாடு அரசு அடக்குமுறையைக் கையாண்டு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – CPM) மாநிலச் செயலாளர் K. சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்களின் கல்வி உரிமைகளையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காக அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவிவிட்டு, அவர்களைக் கைது செய்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மாணவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து அவற்றுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, கைது நடவடிக்கை மூலம் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் என அரசு நினைப்பது தவறானது. கைது செய்யப்பட்ட மாணவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாநில அரசின் இந்த நடவடிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள இந்தக் கண்டன அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


