கோவை: கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயார், “எனக்கு அரசிடமிருந்து எந்தப் பண உதவியும் வேண்டாம், என் மகளைக் கொன்றவனுக்குக் கடுமையான நீதி மட்டுமே கிடைக்க வேண்டும்” என்று கண்ணீருடன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
தாயாரின் உருக்கமான பேட்டி:
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்தச் சிறுமியின் தாயார், தங்களுக்கு அறிவிக்கப்படும் நிதியுதவிகளை மறுத்து, குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர் பேசுகையில், “எனக்கு எந்த நிதியும் வேண்டாம்.. நீதிதான் வேண்டும். பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் என் பிள்ளை போய்விட்டது. அவள் இனி என்னிடம் திரும்பி வருவாளா? என் பிள்ளையைக் கொன்றவனுக்குக் கொடுக்கப் போகும் தண்டனையைப் பார்த்து, வேறு எவனும் இனி இது போன்ற தவற்றைச் செய்யக் கூடாது. இனி எந்தக் குழந்தைக்கும் இந்த நிலைமை நடக்கவே கூடாது” என்று நெஞ்சை உலுக்கும் வகையில் தெரிவித்தார்.
மாநிலம் தழுவிய அதிர்ச்சி:
கோவையில் நடந்த இந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கை விரைந்து விசாரித்து, குற்றவாளிக்குத் தாமதமின்றி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆறுதல்களையும், ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.


