புதுடெல்லி:

இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் (BJP) அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஃபாலோயர்ஸ் (Followers) எண்ணிக்கையை, வெறும் பொழுதுபோக்கிற்காகத் தொடங்கப்பட்ட ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (Cockroach Janta Party – CJP) என்ற நையாண்டிப் பக்கம் அதிரடியாக முந்தியுள்ளது இணையத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் விசித்திரமான ஆதரவால் இந்த மீம் பக்கம் (Memes Page) தற்போது உலகளவில் வைரலாகி வருகிறது.

அசுர வேகத்தில் உயர்ந்த ஃபாலோயர்ஸ்:

இந்திய அரசியல் கட்சிகளில் சமூக வலைதளங்களில் மிக வலுவான கட்டமைப்பு கொண்டது பா.ஜ.க. இன்ஸ்டாகிராமில் பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ பக்கத்தை சுமார் 8.7 மில்லியன் (87 லட்சம்) பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) என்ற பெயரில் கிண்டலாகத் தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம், நெட்டிசன்களின் மத்தியில் ட்ரெண்டாகத் தொடங்கியது. ஆரம்பத்தில் வெறும் 10 ஃபாலோயர்ஸுடன் இருந்த இந்தப் பக்கம், குறுகிய காலத்திலேயே பா.ஜ.க-வின் 8.7 மில்லியன் ஃபாலோயர்ஸ் சாதனையைத் தகர்த்தெறிந்து 13.3 மில்லியன் (1.33 கோடி) ஃபாலோயர்ஸ்களைப் பெற்று அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

இணையத்தில் குவியும் மீம்கள்:

“பா.ஜ.க-வையே முந்திய சி.ஜே.பி” என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களான எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராமில் மீம்கள் பறக்கின்றன. டிஜிட்டல் உலகில் நெட்டிசன்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் ட்ரெண்ட் செய்ய முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றுமொரு உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. எந்தவொரு அரசியல் பின்னணியும் இல்லாமல், வெறும் பொழுதுபோக்கு மற்றும் நையாண்டிக்காக உருவாக்கப்பட்ட ஒரு பக்கம், ஒரு தேசியக் கட்சியின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையைத் தாண்டியிருப்பது டிஜிட்டல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version