சென்னை:

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய கூட்டணி அமைச்சரவையில் மாவட்ட வாரியான பிரதிநிதித்துவத்தில் பெரும் சமநிலையின்மை நிலவுவதாக அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. தமிழகத்தின் மொத்தம் உள்ள மாவட்டங்களில், சுமார் 19 மாவட்டங்களுக்குப் புதிய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சமச்சீரான மண்டல வளர்ச்சிக்கு இது தடையாக அமையலாம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

தவெக எம்.எல்.ஏ-க்கள் இருந்தும் 12 மாவட்டங்களுக்கு ஏமாற்றம்:

புதிய அமைச்சரவை உருவாக்கத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ள போதிலும், 12 மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் எந்தவொரு இடமும் ஒதுக்கப்படவில்லை. தகுதியான மற்றும் சீனியர் எம்.எல்.ஏ-க்கள் இருந்தும் தங்களது மாவட்டங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால், அந்தந்த மாவட்ட தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் லேசான அதிருப்தி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் வசம் 8 மாவட்டங்கள் – குமரிக்கு அடித்த யோகம்:

கூட்டணிக் கட்சியான காங்கிரஸைப் பொறுத்தவரை, தமிழகத்தின் 8 மாவட்டங்களில் தவெக-வுக்கு எம்.எல்.ஏ-க்களே இல்லாத சூழல் நிலவுகிறது. அந்த மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்குச் செல்வாக்கு உள்ளதால், அங்கு கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையிலும், கூட்டணிக்குக் கௌரவம் அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்மாவட்டப் பிரதிநிதித்துவத்தை ஓரளவுக்குச் சமாளிக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

விடுபட்ட 19 மாவட்டங்கள்:

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் 19 மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்கள், குறிப்பிட்ட சமூகச் சமன்பாடுகள் மற்றும் சென்னை, நாமக்கல் போன்ற மாவட்டங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அமைச்சரவையில் இடம் கிடைக்காத மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, முதல்வர் விஜய் சிறப்பு கவனத்தை அந்த மாவட்டங்கள் மீது செலுத்துவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share.
Leave A Reply

Exit mobile version