பதிவுத்துறை தலைவருக்கு பொதுமக்கள் நலன் கருதி பெயிரா கடிதம்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், எதிர்வரும் 06.03.2026 வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த தினம் மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்கிட ஆவண செய்யக் கோரி தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் அவர்களுக்கு பொதுமக்களின் நலன் கருதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்..

எதிர்வரும் 06.03.2026 வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த தினம் மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு இந்நன்னாளில் பெரும்பாலான பொதுமக்கள் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வமும் – மகிழ்ச்சியும் மற்றும் மனதிருப்தியும் அடைகின்றார்கள். எனவே சுபமுகூர்த்த நாட்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் குறிப்பாக பம்மல், பல்லாவரம், திருப்போரூர், படப்பை, செங்கல்பட்டு, ஆவடி, கூடுவாஞ்சேரி, தாம்பரம், திருப்பெரும்புதூர், நீலாங்கரை உள்ளிட்ட பல சார் பதிவாளர் அலுவலகங்களில் சுபமுகூர்த்த தினங்களில் ஆவண பதிவு செய்ய தேவையான அளவிற்கு முன்பதிவு வில்லைகளை வழங்குவதில் பற்றாக்குறை நிலவுவதின் காரணமாக பெரும்பாலான பொதுமக்களுக்கு முன்பதிவு வில்லைகள் கிடைக்க பெறாமல் ஏமாற்றத்துக்கும், மனவருத்தத்திற்கும் உள்ளாகின்றனர்.

 எனவே பொதுமக்களின் உணர்வுகளுக்கும், எண்ணங்களுக்கும் பதிவுத்துறை மதிப்பளித்து ஆவண பதிவுகளை அனைத்து மக்களும் மேற்கொள்ளும் வகையில் வழக்கத்தைவிட கணிசமாக முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்கிட வேண்டுகிறோம். இவ்வாறு கணிசமான அளவில் முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்குவதன் மூலம் பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறும்.

ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்கள் இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, சுபமுகூர்த்த நன்னாளில் பத்திர பதிவு செய்ய விரும்பும் மக்கள் மகிழ்வுறும் வகையில் தமிழகம் முழுவதிலும் முன்பதிவு டோக்கன்கள் பற்றாக்குறை நிலவும் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்கிட உரிய வழிவகை செய்ய வேண்டுமென அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி பொதுமக்களின் நலன் கருதி பதிவுத்துறை தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version