சட்டோகிராம்: வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி களம் இறங்கிய வங்கதேச அணி, ஆஸ்திரேலிய அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிரடியாக பந்துவீசிய ஆடம் ஜாம்பா மற்றும் ஜோயல் டேவிஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச அணியின் ரன் குவிப்பை முடக்கினர்.

இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. ஆஸ்திரேலிய அணியில் கூப்பர் கான்னோலி அதிரடியாக விளையாடி 47 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆடம் ஜாம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version