சென்னை: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா மற்றும் சந்தானம் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி ஆல்-டைம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் ‘ராஜா ராணி’. நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் மிகச்சிறந்த ‘கம்பேக்’ திரைப்படமாக அமைந்த இதன் பின்னணி குறித்து, நடிகர் ஆர்யா அண்மையில் கேரளா ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தற்போது ஆர்யா தனது அடுத்த திரைப்படமான ‘அனந்தன் காடு’ படத்தின் விளம்பர பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அப்போது ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாரா எப்படி ஒப்பந்தமானார் என்ற ரகசியத்தை அவர் உடைத்துள்ளார்.

பல முன்னணி நடிகைகள் மறுப்பு – என்ன காரணம்?

ஆர்யா இதுகுறித்து பேசுகையில், “‘ராஜா ராணி’ படத்தின் கதை இரண்டு கதாநாயகிகளைக் கொண்ட ஒரு கதையாகவே (Two-Heroine Subject) முதலில் வடிவமைக்கப்பட்டது. படத்தில் நயன்தாரா மற்றும் நஸ்ரியா இருவரின் கதாபாத்திரங்களுமே சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை.

கதை உருவான நேரத்தில், தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் பிரபலமாக இருந்த பல கதாநாயகிகளிடம் இந்த கதையை அட்லீ கூறினார். ஆனால், மற்றொரு நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதையில் நடிக்க பல நடிகைகள் தயக்கம் காட்டி, படத்தில் நடிக்க மறுத்துவிட்டனர். மேலும், அப்போது அட்லீ ஒரு புதிய இயக்குநராக இருந்ததும், பல நடிகைகள் சிறு காரணங்களைக் கூறி படத்திலிருந்து விலகக் காரணமாக அமைந்தது” என்று ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.

“சும்மா ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என்றுதான் பேசினேன்”

நடிகைகள் விலகிய அந்த சமயத்தில் தான், ஆர்யா இந்த கதாபாத்திரத்திற்காக நயன்தாராவை அணுக முடிவு செய்துள்ளார்.

“2010-ல் வெளியான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படத்திற்குப் பிறகு நயன்தாரா தமிழ் சினிமாவில் ஒரு நீண்ட இடைவெளியில் இருந்தார். நான் சும்மா ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என்ற எண்ணத்தில்தான் நயன்தாராவிடம் பேசினேன்.” – நடிகர் ஆர்யா

“இப்படி ஒரு அருமையான கதை இருக்கிறது, நீங்கள் மீண்டும் படங்களில் நடிக்கத் திட்டமிட்டிருந்தால் இந்த கதையைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள் என்று கூறினேன். கதையைக் கேட்டுவிட்டுச் சொல்வதாகக் கூறிய நயன்தாராவுக்கு, அட்லீ சொன்ன கதை மிகவும் பிடித்துப்போனதால் உடனடியாகப் படத்தில் நடிக்க ஓகே சொன்னார்” என்று ஆர்யா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அட்லீயின் இயக்கமும், ஆர்யா-நயன்தாரா இருவரின் எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்து, அந்தப் படம் தமிழ் சினிமாவின் மாபெரும் காதல் காவியமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version