தமிழகத்தின் வீர வரலாற்றில் அழியாத இடம்பிடித்தவர் உடையாள். ஒரு சாதாரண மாடு மேய்க்கும் சிறுமியாக இருந்த இவர், தனது அசாதாரண துணிச்சல் மற்றும் நாட்டுப்பற்றால் இன்று தெய்வமாக போற்றப்படுகிறார்.

சிவகங்கை மண்ணின் பெருமையை உலகறியச் செய்த இந்த வீரச் சிறுமியின் நினைவாக உருவானதே அரியாகுறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயில்.

வேலு நாச்சியாரை காப்பாற்றிய உடையாள்

வேலு நாச்சியார் தனது கணவர் முத்துவடுகநாதத் தேவரை இழந்த பின், காளையார் கோவிலிலிருந்து தப்பிச் செல்லும் வழியில் அரியாகுறிச்சி அருகே வந்தார். அப்போது உடையாள் என்ற மாடு மேய்க்கும் சிறுமி அவரை சந்தித்தாள்.

வேலு நாச்சியாரை நேரில் கண்ட மகிழ்ச்சியில், அவருக்கு தேவையான உதவிகளை செய்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தாள்.

உயிரைக் கொடுத்த விசுவாசம்

வேலு நாச்சியார் சென்ற பின், அவரைத் தேடி வந்த ஆங்கிலேயர்கள் உடையாளிடம் ராணி சென்ற வழியை கேட்டனர். தெரிந்திருந்தும், “எனக்குத் தெரியும்; ஆனால் சொல்ல மாட்டேன்” என்று துணிவுடன் மறுத்தாள்.

மிரட்டலும், ஆசைகாட்டலும் பலனளிக்கவில்லை. இறுதிவரை வேலு நாச்சியாரின் இருப்பிடத்தை வெளிப்படுத்த மறுத்த உடையாளை, கோபமடைந்த ஆங்கிலேயர்கள் வாளால் வெட்டிக் கொன்றனர்.

அந்த வீரச்சாவே உடையாளை மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கச் செய்தது. பின்னர் அவர் “வெட்டுடையாள்” என்ற பெயரில் தெய்வமாக வழிபடப்பட்டார்.

வேலு நாச்சியாரின் நன்றிக்கடன்

சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய வேலு நாச்சியார், உடையாள் உயிர்தியாகம் செய்த இடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அங்கு வீரக்கல் நாட்டி, தனது வைர திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாக சமர்ப்பித்தார். இதுவே இன்று வெட்டுடையார் காளியம்மன் கோயிலாக திகழ்கிறது.

உடையாள் மகளிர் படை

உடையாளின் வீரத்தையும் தியாகத்தையும் கௌரவிக்கும் வகையில், குயிலி தலைமையிலான மகளிர் படைக்கு “உடையாள் மகளிர் படை” என்று வேலு நாச்சியார் பெயரிட்டார்.

இது, பெண்களின் வீரத்தையும் நாட்டுப்பற்றையும் போற்றும் வரலாற்றுச் சின்னமாகும்.

நீதியின் தெய்வம்

இன்று வெட்டுடையார் காளியம்மன், நீதியை நிலைநாட்டும் தெய்வமாக பக்தர்களால் நம்பப்படுகிறார். தங்களுக்கு அநீதி நடந்ததாக உணரும்வர்கள், இங்கு வந்து “காசு வெட்டிப் போடும்” வழக்கை கடைப்பிடிக்கின்றனர்.

அம்மன் தங்களுக்கு நீதி வழங்குவார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.

கோயில் அமைவிடம்

சிவகங்கையில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில், தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்திலிருந்து தெற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் அரியாகுறிச்சி அமைந்துள்ளது.

இங்கு அமைந்துள்ள வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், பக்தர்களின் மனவேதனைகளை போக்கும் சக்தி மிக்க தலமாக விளங்குகிறது.

தியாகத்தின் சின்னம்

தன் உயிரை அர்ப்பணித்து ஒரு அரசியை மட்டுமல்ல, ஒரு தேசத்தின் எதிர்காலத்தையும் காப்பாற்றிய உடையாளின் தியாகம் என்றும் மறக்க முடியாதது.

அரியாகுறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயில், வீரமும், தியாகமும், நீதியும் ஒன்றாக சங்கமிக்கும் புனிதத் தலமாக இன்றும் கம்பீரமாக திகழ்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version