சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (Mohini Mani) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 80. இச்சம்பவம் ஒட்டுமொத்த திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நலக் குறைவால் மரணம்: நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.எஸ். மணி கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். அதைத் தொடர்ந்து, அஜித்தின் தாயார் மோகினி மணி வயது முதிர்வு காரணமாகக் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. மறைந்த மோகினி மணி அவர்களுக்கு அனூப் குமார், அஜித்குமார், அனில் குமார் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
எளிமையாக நடக்கும் இறுதிச்சடங்கு: தாயாரின் மறைவையொட்டி அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர். ஏற்கனவே தந்தை இறந்தபோதும் பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இறுதிச்சடங்குகளை அஜித்குமார் மிக எளிமையாக நடத்தினார். அதேபோல், தற்போதும் தாயாரின் இறுதிச்சடங்குகளும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கக் கூடிய வகையில் மிக எளிமையான முறையில் சென்னை பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாயாரை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் திரை உலகைச் சேர்ந்த பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், லட்சக்கணக்கான ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை சமூக வலைதளங்கள் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர்.


