சென்னை: 35. மதுராந்தகம் (தனி) மற்றும் 101. தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 06.10.2026 அன்று காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, 04.10.2026 மாலை 6:00 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை, 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ் நடைமுறைக்கு வரும் முக்கியக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
முக்கிய தேர்தல் கட்டுப்பாடுகள் & விதிமுறைகள்:
- பிரச்சாரம் மற்றும் கூட்டங்களுக்குத் தடை:
- பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதற்கோ அல்லது அவற்றில் பங்கேற்பதற்கோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஊடகங்கள் & சமூக வலைத்தளங்கள் தடை:
- திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல் (Facebook), எக்ஸ் (Twitter), குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்ளிட்ட அனைத்து மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும் தேர்தல் தொடர்பான எந்தவொரு விவகாரத்தையும் பரப்பக்கூடாது.
- கலை நிகழ்ச்சிகள் & பொழுதுபோக்கு மூலம் பிரச்சாரத் தடை:
- இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் அல்லது பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களை ஈர்த்துப் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது.
- தண்டனை விவரம்: இவ்விதிமுறைகளை மீறினால் 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
- வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவு:
- தொகுதிக்குத் தொடர்பில்லாத அரசியல் கட்சி நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் வாக்காளர்கள் அல்லாத வெளிநபர்கள் அனைவரும் 04.10.2026 மாலை 6.00 மணிக்கு மேல் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும். கல்யாண மண்டபங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகளில் தீவிரத் தணிக்கை மேற்கொள்ளப்படும்.
- வாகன அனுமதிச் சீட்டுகள் ரத்து:
- நட்சத்திரப் பேச்சாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட அனைத்து வாகன அனுமதிகளும் 04.10.2026 மாலை 6:00 மணியுடன் செயலிழந்துவிடும்.
- வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளரின் சொந்த பயன்பாட்டிற்கு 1 வாகனம், தேர்தல் முகவருக்கு 1 வாகனம் மற்றும் அவரது பணியாளர்களுக்கு 1 வாகனம் எனத் தேர்தல் நடத்தும் அதிகாரியால் முறைப்படி அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
- வாக்காளர்களை அழைத்து வரத் தடை:
- வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கோ அல்லது திருப்பி அனுப்புவதற்கோ வேட்பாளர்களோ/முகவர்களோ வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும் (பிரிவு 133-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்).
- தேர்தல் பணி அலுவலகங்கள்:
- வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு வெளியே, இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட தேர்தல் அலுவலகங்களை கட்சிகள் அமைத்துக் கொள்ளலாம்.


