தமிழகத்தில் மார்ச் மாத இறுதியில் பத்திரப்பதிவு பணிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு, வரும் மார்ச் 28, 2026 (சனிக்கிழமை) அன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட அனுமதி கோரி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கோரிக்கைக்கான முக்கிய காரணங்கள்:
- அஷ்டமி, நவமி தாக்கம்: வரும் மார்ச் 26 (வியாழன்) மற்றும் மார்ச் 27 (வெள்ளி) ஆகிய தேதிகள் அஷ்டமி மற்றும் நவமி என்பதால், பொதுமக்கள் சுப காரியங்களைத் தவிர்ப்பார்கள். இதனால் அந்த இரு நாட்களில் பத்திரப்பதிவு மற்றும் அரசு வருவாய் குறைய வாய்ப்புள்ளது.
- நிதியாண்டு இறுதி (Financial Year End): 2025-26-ஆம் நிதியாண்டு வரும் மார்ச் 31-டன் நிறைவடைகிறது. நிதியாண்டு முடிவதற்குள் சொத்துக்களைப் பதிவு செய்ய பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்முனைவோர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
- அரசு வருவாய் அதிகரிப்பு: சனிக்கிழமை அலுவலகங்கள் செயல்படுவதன் மூலம், அஷ்டமி-நவமி நாட்களில் தடைபட்ட வருவாயை ஈடு செய்ய முடியும் என அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

