மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான்–இஸ்ரேல் போரின் தாக்கம் இந்தியாவின் உணவு ஏற்றுமதி துறையையும் பாதித்துள்ளது. போரால் ஏற்பட்ட போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் மற்றும் துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் மாம்பழ கூழின் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும், வளைகுடா பகுதிகளில் உள்ள துபாய், சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளுக்கும் மொத்த உற்பத்தியின் சுமார் 50 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போதைய போர் பதற்றம் மற்றும் கடல் போக்குவரத்து தடைகள் காரணமாக ஏற்றுமதி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக மாம்பழ கூழ் சரக்குகள் தொழிற்சாலைகளிலும் துறைமுகங்களிலும் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் ஏற்றுமதியாளர்கள் மற்றும் செயலாக்க தொழிற்சாலைகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிலைமை விரைவில் சீராகி, சர்வதேச கடல் போக்குவரத்து வழக்கத்திற்கு திரும்பினால் மட்டுமே இந்த தேக்கம் குறையும் என தொழில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

