ஆன்லைன் திருமணத் தகவல் மையங்கள் மூலம் நடைபெறும் ஆள்மாறாட்டம், போலி சுயவிவரப் பதிவுகள் மற்றும் நிதியிழப்பு உள்ளிட்ட திருமண மோசடிகளைக் கட்டுப்படுத்தத் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, Matrimony.com தளத்தில் பயனாளர்களின் அடையாளத்தை உறுதிசெய்யத் தன்னார்வ அடிப்படையில் அரசு அடையாள அட்டை அங்கீகாரத்தைச் செயல்படுத்தத் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
- ஆள்மாறாட்டத்திற்கு முற்றுப்புள்ளி: பயனர்களின் சுயவிவரங்களில் உள்ள வயது, முகவரி மற்றும் திருமண நிலை உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்த்து, “சரிபார்க்கப்பட்ட பயனர்” (Verified Profile) என்ற குறியீட்டை வழங்குவதன் மூலம் போலி கணக்குகளைத் தடுக்க முடியும்.
- கட்டாயமில்லை (தன்னார்வ விருப்பம்): இந்த அடையாளச் சரிபார்ப்பு முற்றிலும் பயனர்களின் சுய விருப்பத்திற்கு உட்பட்டது.
- மாற்று அடையாள ஆவணங்கள்: அரசு அடையாளச் சரிபார்ப்பை மேற்கொள்ள விரும்பாத அல்லது இயலாத பயனர்கள் ஓட்டுநர் உரிமம் (Driving License), பாஸ்போர்ட் (Passport) மற்றும் நிரந்தரக் கணக்கு எண் (PAN) அட்டை ஆகியவற்றை மாற்றுச் சான்றாகப் பயன்படுத்தலாம்.
- சேவைகள் மறுக்கப்படாது: மாற்று ஆவணங்களை அளிக்கும் பயனர்களுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் சேவைகளை மறுக்கக் கூடாது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

