வாஷிங்டன் / பெய்ஜிங்:
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பைக் காரணம் காட்டி, சீனாவில் தயாரிக்கப்படும் அதிநவீன மனிதவடிவ ரோபோக்கள் (Humanoid Robots) மற்றும் நான்கு கால் ரோபோக்கள் (Robot Dogs) இறக்குமதிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திடீர் தடை விதித்துள்ளது.
அமெரிக்கக் கூட்டரசுத் தொடர்பு ஆணையம் (FCC) செவ்வாய்க்கிழமை அறிவித்த இந்த அதிரடித் தடைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அமெரிக்காவுக்குப் பகீரங்க எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
தடைக்கான காரணம் என்ன? (அமெரிக்கத் தரப்பு)
அமெரிக்காவின் FCC வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:
- தரவுத் திருட்டு & கண்காணிப்பு: சீன ரோபோக்கள் இணைய வழியில் அமெரிக்கர்களின் தனிப்பட்ட தரவுகளைச் சேகரித்து வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு அனுப்பக்கூடும் அல்லது தொலைதூரத்தில் இருந்து கட்டுப்படுத்தப்படலாம் (Remotely Commandeered).
- உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்பு: டெஸ்லா, ஃபிகர் ஏஐ (Figure AI) போன்ற அமெரிக்க நிறுவனங்களின் ஏஐ மற்றும் ரோபோட்டிக்ஸ் உற்பத்தியை உயர்த்தி, விநியோகச் சங்கிலியில் சீனக் கட்டுப்பாட்டைக் குறைப்பது.
- ரோபோக்கள் தவிர, சூரிய மின் உற்பத்தி மற்றும் தரவு மையங்களுக்குப் பயன்படும் சீனத் தயாரிப்பு ‘பவர் இன்வெர்ட்டர்களுக்கும்’ (Power Inverters) இந்தத் தடை பொருந்தும்.
சீனாவின் பகீரங்க எச்சரிக்கை!
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது:
*”தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வர்த்தக விவகாரங்களை அமெரிக்கா தொடர்ந்து அரசியல்மயமாக்குவதையும், ஆதாரமற்ற சாக்குகளைக் கூறி சீன நிறுவனங்கள் மீது அவதூறு பரப்புவதையும் நிறுத்த வேண்டும்.”
“சீனாவின் நியாயமான உரிமைகளுக்கும் நலன்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக, சீனா தேவையான அனைத்துத் தீவிர நடவடிக்கைகளையும் எடுக்கும்” என அமெரிக்காவுக்குச் சீனா நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது.*

