சென்னை:
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அரசியல் விமர்சனம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தங்களின் ஆதரவாளர்களுடன் இன்று அதிகாரப்பூர்வமாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ளனர். இந்த அரசியல் சூழலை மையமாக வைத்து கனிமொழி எம்பி மிகக் காரசாரமான அரசியல் சாடலை முன்வைத்துள்ளார்.
கனிமொழியின் எக்ஸ் (X) பதிவு:
“வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற ‘வாஷிங்மெஷின்’ ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே… உண்மையா?”
— கனிமொழி கருணாநிதி, எம்பி.
பின்னணி என்ன?
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பெரும் பேசுபொருளான ‘குட்கா ஊழல்’ வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அவர் தற்போது தவெக-வில் இணைவதை மறைமுகமாகக் குறிப்பிட்டு, “குட்கா கறையைத் துடைக்கும் வாஷிங் மெஷின்” என விஜய்யின் தவெக கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் கனிமொழி.
பாஜகவில் இணையும் எதிர்கட்சித் தலைவர்களின் மீதான வழக்குகள் மறைந்து போவதை தேசிய அளவில் ‘பாஜக வாஷிங் மெஷின்’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அதே போன்ற ஒரு கலாச்சாரம் தற்போது தமிழ்நாட்டில் தவெக மூலமாகத் தொடங்கியுள்ளதா? என கனிமொழி எழுப்பியுள்ள இந்தக் கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

