புதுடெல்லி: நாடு முழுவதும் ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட்-யுஜி (NEET-UG 2026) மறுதேர்வை முன்னிட்டு, வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமிற்கு (Telegram) ஜூன் 22 வரை தற்காலிகத் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act 2000)-இன் பிரிவு 69ஏ-ன் கீழ் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடைக்கான பின்னணி: கடந்த சில வாரங்களாக டெலிகிராம் செயலியில் “நீட் வினாத்தாள் கசிவு” (Paper Leaked NEET), “ரீ-நீட் மாஃபியா” போன்ற பல்வேறு பெயர்களில் நூற்றுக்கணக்கான போலிக் குழுக்கள் மற்றும் சேனல்கள் உருவாக்கப்பட்டு, மாணவர்களிடம் பணம் பறிக்கும் மோசடிச் செயல்கள் அரங்கேறி வந்தன. தேர்வு முறையின் நம்பகத்தன்மையைக் குலைக்கும் வகையிலும், மாணவர்களிடையே தேவையற்ற பீதியை உருவாக்கும் வகையிலும் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்தத் தற்காலிக முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டுப்பாடுகள்: ஜூன் 22-ஆம் தேதியுடன் இந்த முழுமையான தடை நிறைவடையும் போதிலும், முறைகேடு செய்பவர்கள் தப்பிப்பதைத் தடுக்கும் வகையில் மற்றொரு முக்கிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெலிகிராம் செயலியில் ஏற்கெனவே அனுப்பப்பட்ட செய்திகளைத் திருத்தும் வசதியை (Message-Editing Feature) வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும் என்று டெலிகிராம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் போலியான செய்திகளை எடிட் செய்து பரப்பும் மோசடிகள் தடுக்கப்படும்.
தேசிய தேர்வு முகமையின் அறிவுறுத்தல்: அரசின் இந்த அதிரடி முடிவை தேசிய தேர்வு முகமை (NTA) வரவேற்றுள்ளது. மேலும், நீட் தேர்வு குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை மாணவர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும், வினாத்தாள்களை முன்கூட்டியே யாருக்கும் பெற முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. போலியான இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் குறித்துப் புகார் அளிக்க பிரத்யேகப் போர்ட்டல் ஒன்றையும் என்.டி.ஏ அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்தத் தற்காலிக நடவடிக்கை, லட்சக்கணக்கான நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தேர்வைக் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதற்கு இது மிகவும் அவசியமான ஒன்று என்று கல்வித் துறை வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
