மியாமி: உலகக்கோப்பை கால்பந்து திருவிழா தொடங்க சில வாரங்களே உள்ள நிலையில், அர்ஜென்டினா அணியின் கேப்டனும் கால்பந்து உலகின் ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) இடது தொடை தசைநார் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிலடெல்பியா யூனியன் (Philadelphia Union) அணிக்கு எதிரான இன்டர் மியாமி கிளப் போட்டியின் போது, ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் மெஸ்ஸி மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
மருத்துவக் குழு மற்றும் கிளப் நிர்வாகத்தின் அறிக்கை: இதுகுறித்து இன்டர் மியாமி (Inter Miami CF) கால்பந்து கிளப் நிர்வாகம் மற்றும் மருத்துவக் குழுவினர் நடத்திய பரிசோதனைக்குப் பின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
“திங்கட்கிழமை நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின்படி, மெஸ்ஸியின் இடது தொடை தசைநார் பகுதியில் (Left Hamstring) கடுமையான சோர்வு மற்றும் தசைப்பிடிப்பு (Overload associated with muscle fatigue) ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் மீண்டும் உடற்தகுதி பெற்று எப்போது களமிறங்குவார் என்பது அவரது உடல்நிலை தேறும் வேகத்தைப் பொறுத்தே அமையும். அவரது மருத்துவ நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.”
உலகக்கோப்பைக்கு பின்னடைவா? உலகக்கோப்பை கால்பந்து போட்டி (FIFA World Cup 2026) ஜூன் 16 அன்று தொடங்கவுள்ள சூழலில், மெஸ்ஸியின் இந்த தசைப்பிடிப்பு அர்ஜென்டினா அணிக்கு தற்காலிக பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எனினும், இன்டர் மியாமி அணியின் பயிற்சியாளர் கில்லர்மோ ஹோயோஸ் (Guillermo Hoyos) பேசுகையில், “மழை காரணமாக மைதானம் மிகவும் கடினமாக இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே (Precautionary Measure) அவர் மைதானத்தில் இருந்து மாற்றப்பட்டார்; காயம் பெரிய அளவில் தீவிரமானது அல்ல” என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா அணி ஜூன் 16 அன்று தனது முதல் ஆட்டத்தில் அல்ஜீரியாவை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், அதற்குள் மெஸ்ஸி முழு உடற்தகுதியுடன் திரும்புவார் என்று கால்பந்து உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

