சென்னை: தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் பல்வேறு கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தேர்தல் களத்தில் தீவிரமாக மோதிக் கொண்ட போதிலும், ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மாற்றுக்கட்சித் தலைவர்களைச் சந்திக்கும் முதலமைச்சரின் இந்த ‘நாகரிக அரசியல் பயணம்’ பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இருப்பினும், அனைத்து முக்கிய கட்சித் தலைவர்களையும் சந்திக்காமல், குறிப்பிட்ட சில தலைவர்களை மட்டுமே முதலமைச்சர் தேர்வு செய்து சந்தித்துள்ளது ஏன் என்ற கேள்வியும், விமர்சனமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தக்க வைப்பதற்காகவே இந்த சந்திப்புகள் நடத்தப்படுகிறதா என்ற வாதங்களையும் அரசியல் நோக்கர்கள் முன்வைக்கின்றனர்.
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்த பலர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளும், நிர்வாகச் சீர்கேடுகளும் முன்வைக்கப்பட்டன. இந்த ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை முதன்மைப் படுத்தியே தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் களத்தைச் சந்தித்து வெற்றி பெற்றது. கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீதான ஊழல் ஆதாரங்களுடன் வழக்குப்பதிவு செய்யுமாறு மத்திய அமலாக்கத்துறை, தமிழக காவல்துறைத் தலைமை இயக்குநர் மற்றும் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியும், இதுவரை முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் பொதுமக்களிடையே நிலவுகிறது.
எனவே, தற்போதைய முதலமைச்சரின் இந்த சுமுகமான ‘நாகரிகச் சந்திப்புகள்’, முந்தைய ஆட்சியாளர்களின் ஊழல் முறைகேடுகளைக் மூடிமறைக்கும் காரணியாக மாறிவிடக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எந்தெந்த துறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனவோ, அவை அனைத்தையும் வெளிப்படைத்தன்மையுடன் விசாரித்து, தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.
ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை புதிய அரசு வழங்கும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆகவே, ஊழல் செய்தவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடக் கூடாது என்பதை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

