டாக்கா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் (Donald Trump) தனித்துவமான தலைமுடித் தோற்றத்தை ஒத்திருந்ததால் இணையத்தில் வைரலான மாடு ஒன்று, பக்ரீத் பண்டிகைக்காகப் பலியிடப்படுவதில் இருந்து அதிர்ஷ்டவசமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இம்மாடு தற்போது வாழ்நாள் முழுமைக்குமான பராமரிப்பிற்காக வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் ‘ஹேர்ஸ்டைல்’ மாடு
வங்கதேசத்தில் உள்ள ஒரு மாட்டுப் பண்ணையில் வளர்ந்த இந்த மாட்டின் தலையில் இருந்த முடிகளின் வடிவமும், அதன் நிறமும் அச்சு அசலாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமுடித் தோற்றத்தைப் போலவே இருந்துள்ளது. இதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பண்ணை உரிமையாளர் பகிர, அது உலக அளவில் “டிரம்ப் மாடு” (Trump Cow) என்று நெட்டிசன்களால் அழைக்கப்பட்டு பட்டிதொட்டியெங்கும் வைரலானது.
பலியிடுவதில் இருந்து விலக்கு
பக்ரீத் (தியாகத் திருநாள்) பண்டிகையை முன்னிட்டு இந்த மாடு விற்பனைக்காகச் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டது. வழக்கமாக இது போன்ற வைரல் விலங்குகள் அதிக விலைக்கு இறைச்சிக்காக ஏலம் போகும். ஆனால், இந்த மாட்டின் வித்தியாசமான தோற்றமும், அதற்கு இணையத்தில் கிடைத்த பிரபல்யமும் அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த மாட்டைப் பலியிடாமல் பாதுகாக்க அதன் உரிமையாளர் முடிவெடுத்தார்.
உயிரியல் பூங்கா அதிகாரிகள் தகவல்: “இந்த மாட்டின் தனித்துவத்தைக் கருத்தில் கொண்டு, அதனைப் பாதுகாப்பாகப் பராமரிக்க டாக்காவில் உள்ள தேசிய உயிரியல் பூங்கா (Dhaka National Zoo) நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். இங்கு அதற்குத் தேவையான பிரத்யேக தங்குமிடமும், வாழ்நாள் முழுவதற்குமான மருத்துவ மற்றும் உணவுப் பராமரிப்பும் வழங்கப்படும்.”
தற்போது இந்த ‘வைரல்’ மாட்டைக் காண்பதற்காகவே டாக்காவில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவிற்குப் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களின் வருகை கணிசமாக அதிகரித்து வருகிறது.


