மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஈரான் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் மற்றும் போரின் தற்போதைய நிலை குறித்து அவர் வெளியிட்ட தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதிக சேதம் – ட்ரம்ப் பெருமிதம்: செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஈரான் மீதான போர் மிகவும் சிறப்பாகவும், திட்டமிட்டபடியும் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 6 வார கால ராணுவ நடவடிக்கைகளில், நாங்கள் முதலில் நினைத்ததை விட மிக அதிகமான சேதங்களை ஈரானுக்கு ஏற்படுத்தியுள்ளோம். அந்நாட்டின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. உண்மையைச் சொல்லப்போனால், தற்போது ஈரானில் தாக்குவதற்கு என்று எதுவுமே மிச்சமில்லை (Almost nothing left to hit)” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
போர் நிறுத்தம் எப்போது? ஈரான் உடனான இந்தப் போரை எப்போது நிறுத்துவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்தப் போரை நான் எந்த நேரத்திலும் நிறுத்துவேன். ஆனால் அது அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கும், பாதுகாப்பிற்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும். ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் தளங்களைச் செயலிழக்கச் செய்வதே எங்களின் முக்கிய நோக்கம். அந்த இலக்கை நோக்கி நாங்கள் மிக வேகமாக முன்னேறி வருகிறோம்,” எனத் தெரிவித்தார்.
சர்வதேச பதற்றம்: அதிபர் ட்ரம்ப்பின் இந்த வெளிப்படையான பேச்சு, ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்தத் தீவிரத் தாக்குதல்களால் ஈரானின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் துறை பெரும் முடக்கத்தைச் சந்தித்துள்ளதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பல நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், “தாக்குவதற்கு எதுவுமே இல்லை” என்ற ட்ரம்ப்பின் கருத்து, போர் விரைவில் ஒரு முடிவுக்கு வரலாம் அல்லது ஈரான் முழுமையாகச் சரணடைய வாய்ப்புள்ளது என்பதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

