அகர்தலா:

திரிபுரா மாநிலக் காவல் துறை தலைமை இயக்குநராகப் (DGP) பணியாற்றி வந்த சிரேஷ்ட ஐ.பி.எஸ் அதிகாரி அனுராக் தன்கர் (Anurag Dhankar), அகர்தலாவில் உள்ள மாநிலக் காவல் தலைமையகத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அலுவலகத்திலேயே நேர்ந்த சோகம்

1994-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான அனுராக் தன்கர், தனது அலுவலகக் கழிவறைக்குச் சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை உடைத்துச் சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அகர்தலா ஜி.பி.பந்த் (GBP) மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துப் பரிசோதித்து, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். முதற்கட்டத் தகவல்களின்படி அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

காவல் துறை விசாரணை

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா மற்றும் மூத்த காவல் அதிகாரிகள் மருத்துவமனைக்கும் காவல் தலைமையகத்திற்கும் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்பிற்கான உண்மைக்கான காரணத்தைக் கண்டறியப் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

நீண்ட காலச் சேவை

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ (CBI), ஐ.நா அமைதிப் படை (UN Peacekeeping) மற்றும் மாநிலக் காவல் துறையில் பல்வேறு உயர்பதவிகளை வகித்த அனுபவம் மிக்க மூத்த அதிகாரி ஒருவர், காவல் தலைமையகத்திலேயே உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version