சென்னை: தாம்பரத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில், கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு பேசிய கருத்து, அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

தாம்பரத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கம்பம் செல்வேந்திரனை மேடைக்கு அழைத்து பேசுகையில், அவர் முன்னிலையில் டி.ஆர்.பாலு சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். கம்பம் செல்வேந்திரனைப் பார்த்து, “தெற்கத்திக்காரன் பயப்படக்கூடாது. நீ வரும்போது அரிவாள் எடுத்துட்டு வருவன்னு பார்த்தேன். ஆனால், வெறும் கையோடு வந்திருக்கிறாய். இப்படியே இருந்தால் உன்ன நாலு பேரு வெட்டிடுவாங்க போல” என்று பேசியுள்ளார்.

விமர்சனங்கள்

மேலும், “தெற்கத்திக்காரன் வரும்போது அரிவாளைக் கொண்டுவந்து 4 பேரை வெட்டிவிட்டுப் போவார்கள்” என்ற தொனியில் அவர் பேசியது, சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. ஒரு பொறுப்புள்ள மூத்த தலைவர், பொதுமேடையில் வன்முறையைத் தூண்டும் வகையிலும், ஒரு குறிப்பிட்ட பிராந்திய மக்களை அடையாளப்படுத்தி இப்படியொரு கருத்து தெரிவித்திருப்பது தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அரசியல் தாக்கம்

டி.ஆர்.பாலுவின் இந்தப் பேச்சு, எதிர்க்கட்சிகளுக்கு விமர்சனம் செய்ய ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. திமுகவின் மூத்த தலைவர்கள் இத்தகைய பேச்சுகளைத் தவிர்த்து, நாகரிகமான அரசியல் உரையாடலை முன்னெடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக திமுக தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான விளக்கமோ அல்லது மன்னிப்போ கோரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version