சென்னை: காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிராக, புதிய நதிநீர் நடுவர் மன்றம் (Tribunal) அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்த விவகாரத்தில் புதிய சட்டப்பூர்வ அணுகுமுறை அவசியம் என்று குறிப்பிட்டார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவையில் பேசியதாவது:

“மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தனது தந்திரங்களை (யுக்தி) மாற்றி செயல்பட்டு வருகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் மீது தமிழகம் நம்பிக்கை இழந்துள்ள சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, 1956-ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவாதச் சட்டத்தின் (Inter-State River Water Disputes Act, 1956) பிரிவு 4-இன் கீழ், புதிய நதிநீர் நடுவர் மன்றம் ஒன்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். இதுவே தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தற்போதைய அவசிய தேவையாகும்.”

மேலும், “மேகதாது விவகாரத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு தொடர் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது. நதிநீர் பங்கீடு குறித்து கடந்த 2007-ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் கர்நாடக அரசு முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, கீழ்மடி மாநிலங்களின் ஒப்புதலும், மத்திய அரசின் உரிய அனுமதியும் இன்றி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முற்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் முழு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version