தமிழக அரசியல் வரலாற்றில் புதிய பரிணாம நோக்குடன் “வெப்ப பரம்பரை” எனும் அரசியல் கட்சியின் தொடக்க விழா, அதன் தலைமை அலுவலக திறப்பு விழா மற்றும் கட்சி கொடி, கொள்கைகள் அறிமுக நிகழ்ச்சி கடந்த 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் வட்டம் மரகதபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு, இந்திய தேர்தல் ஆணையத்தின் நடைமுறை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு முறையாக நடத்தப்பட்டது.





இந்த விழாவை “வெப்ப பரம்பரை” கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. எஸ். ஜெய்சங்கர் (இறைசித்தர் வெப்பதாசர்) அவர்கள் தலைமையேற்று சிறப்பாக முன்னெடுத்து நடத்தினார்.
நிகழ்வில் கட்சியின் அமைப்பு செயலாளரும் இசை அமைப்பாளருமான திரு. காந்திதாஸ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
தொடர்ந்து மாநில மகளிர் அணி கௌரவ தலைவர் திருமதி பிரியா, மாநில இளைஞர் அணி செயலாளர் திரு. ஜெ. நிம்மதிதாசன், வெப்ப இளைஞர் படை மாநில அமைப்பாளர் திரு. ரா. இளங்கோ, வெப்ப இளைஞிகள் படை மாநில அமைப்பாளர் திருமதி சிவசங்கரி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் உரையாற்றினர்.
மேலும் புதுச்சேரி மாநில தலைவர் திரு. எஸ். அன்பழகன், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. எம். பிரகாஷ், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. வெங்கடேசன், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. வேலு, திருச்சிராப்பள்ளி மாநகர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. எம். ராஜேஷ் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முதல் ஆதரவாளர் திருக்கோவிலூர் திரு. சத்யநாராயணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக பங்கேற்றனர்.
கட்சியின் அடிப்படை கொள்கை
“எங்கும் வெப்பம் – எதிலும் வெப்பம் – எல்லாமே வெப்பம்” என்ற அடிப்படை சிந்தனையை மையமாகக் கொண்டு மனித வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் (அரசியல், அறிவியல், ஆன்மிகம், வாழ்வியல்) ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை உருவாக்குவதே “வெப்ப பரம்பரை” கட்சியின் நோக்கமாகும்.
மனிதர்கள் தங்களை “வெப்ப பரம்பரை” என உணர்ந்து வாழும் போது சமூகத்தில் பாகுபாடுகள் நீங்கி, ஒற்றுமை வளர்ந்து, மக்கள் சார்ந்த அரசியல் உருவாகும் என கட்சி வலியுறுத்துகிறது.
சமூக முன்னேற்ற நோக்கம்
இந்தக் கட்சி கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, வருமான உயர்வு, சுகாதாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகிய அனைத்து துறைகளிலும் சமநிலை கொண்ட வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் மனித சமூகம் உயர்ந்த தரமான, அமைதி மற்றும் நிம்மதி நிலை கொண்ட சமூகமாக மாற்றம் அடையும் என நிறுவனர் தெரிவித்தார்.

தேர்தல் அறிவிப்பு
வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் “வெப்ப பரம்பரை” கட்சியின் ஆதரவுடன் அதன் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. எஸ். ஜெய்சங்கர் (இறைசித்தர் வெப்பதாசர்) அவர்கள் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

