புதுடெல்லி: இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடைக்கு பின்னணியில் ரிலையன்ஸ் குழுமம் மற்றும் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) ஆகியவை இருக்கலாம் என டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ. பாவெல் துரோவ் (Pavel Durov) அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்னிட்டு, இந்தியாவில் ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாவெல் துரோவ், தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம், பி.ஜி.பி ஹைஜாக்கிங் (BGP hijacking – இணைய போக்குவரத்து பாதையை மாற்றுதல்) என்ற முறையற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு வெளியே (யு.ஏ.இ உட்பட) வாழும் மில்லியன் கணக்கான பயனர்களின் டெலிகிராம் தொடர்புகளை திட்டமிட்டு துண்டித்து சதி செய்கிறது.
இது முற்றிலும் ஒரு வணிகப் போட்டியாகவே தெரிகிறது. ஏனெனில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா பங்குகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் டெலிகிராமை தடை செய்யக் கோரி ரிலையன்ஸ் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்கள் திரைமறைவில் அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்று நான் கருதினால் அதில் வியப்பில்லை.”
– பாவெல் துரோவ், சி.இ.ஓ, டெலிகிராம்
இந்தத் தடை நடவடிக்கை காரணமாக இந்தியாவில் உள்ள சுமார் 15 கோடிக்கும் அதிகமான சாதாரண டெலிகிராம் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தவறு செய்த சிலரை விடுத்து ஒட்டுமொத்தப் பொதுமக்களைத் தண்டிப்பது முறையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில்துறை மறுப்பு: மறுபுறம், பாவெல் துரோவின் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என இந்தியத் தொலைத்தொடர்பு வட்டாரங்கள் மறுத்துள்ளன. அவர் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Jio) ஆகிய இரு வேறு நிறுவனங்களுக்கு இடையே குழப்பமடைந்து, போதிய ஆதாரங்களின்றி இந்த அவதூறுகளைப் பரப்புவதாகத் தொழில்துறை தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


