15% சம்பளம் கட்.. நேரடியாக பெற்றோரின் கணக்கிற்குப் போகும்! – பிள்ளைகளுக்கு செக் வைத்த ரேவந்த் ரெட்டி!
வயதான காலத்தில் பெற்றோர்களைத் தவிக்கவிடும் பிள்ளைகளைத் தண்டிக்கும் வகையில், தெலுங்கானா சட்டமன்றத்தில் “Telangana Employees Accountability and Monitoring of Parental Support Bill, 2026” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. “பெற்றோரை மதிக்காதவர்களுக்குச் சமூகத்தில் வாழ உரிமையே இல்லை” என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இந்த மசோதாவின் மீதான விவாதத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
சட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் தண்டனைகள்:
- யார் யாருக்குப் பொருந்தும்?: இந்தச் சட்டம் அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் மட்டுமின்றி, எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும்.
- சம்பளப் பிடித்தம்: ஒரு ஊழியர் தனது பெற்றோரைப் பராமரிக்கத் தவறினால், அவரது மொத்த மாதச் சம்பளத்தில் 15% அல்லது ₹10,000 (எது குறைவோ அது) பிடித்தம் செய்யப்படும்.
- நேரடிப் பரிமாற்றம்: பிடித்தம் செய்யப்படும் அந்தத் தொகை, பாதிக்கப்பட்ட பெற்றோரின் வங்கி கணக்கிற்குத் தானாகவே மாற்றப்படும்.
- யாரிடம் புகார் அளிக்கலாம்?: பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் (District Collector) முறையிடலாம். அவர் 60 நாட்களுக்குள் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
- மேல்முறையீடு: இந்த உத்தரவில் திருப்தி இல்லையெனில், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ‘மூத்த குடிமக்கள் ஆணையத்தில்’ மேல்முறையீடு செய்யலாம்.
- யார் பெற்றோர்?: இச்சட்டம் பெற்ற தாய், தந்தை மட்டுமின்றி சித்தி, மாற்றான் தந்தை (Step-parents) ஆகியோரையும் உள்ளடக்கியது.

