சென்னை: தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விஜயதாரணி, பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொடர்ந்து 3 முறை (2011, 2016, 2021) சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஹாட்ரிக் சாதனை படைத்தவர் விஜயதாரணி. கடந்த 2024 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தனது எம்.எல்.ஏ பதவியைத் துறந்து பாஜகவில் இணைந்தார்.
அதிருப்தியே விலகலுக்குக் காரணமா?
பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது அதற்குப் பின்னரோ கட்சியில் தகுந்த முக்கியத்துவமோ, முக்கியப் பொறுப்புகளோ வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில மாதங்களாகவே கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, தற்போதைய அரசியல் சூழலைக் கணக்கில் கொண்டு அவர் தனது அடுத்த கட்ட முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பனையூர் அலுவலகத்தில் சந்திப்பு?
தமிழக வெற்றிக் கழகம் தங்களை நம்பி வரும் மாற்றுக்கட்சித் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதால், விஜயதாரணி த.வெ.க-வில் இணைய முழு சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்திற்கு அவர் வருகை தந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேச உள்ளதாகவும், அதன் பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ், பாஜக என தேசியக் கட்சிகளில் வலம் வந்த ஒரு முக்கிய பெண் ஆளுமை, தற்போது தமிழகத்தின் வளர்ந்து வரும் பிராந்தியக் கட்சியான த.வெ.க-வில் ஐக்கியமாக இருப்பது கோலிவுட் மற்றும் கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


