சென்னை: கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து விரைவில் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மின்வாரியத்தின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் கடந்த கால நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவர் கூறியதாவது:

“தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைக்குக் கடந்த கால தி.மு.க. ஆட்சியின் தவறான நிர்வாகமும், திட்டமிட்டு நடத்தப்பட்ட ஊழல்களுமே முக்கியக் காரணம். குறிப்பாக, டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) கொள்முதல் செய்ததில் மட்டும் அப்பட்டமாக 30 சதவீதத்திற்கும் மேல் ஊழல் நடந்துள்ளது.

ஏறத்தாழ 44 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ள விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்று, சிபிஐ (CBI) விசாரணையில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன நடந்தது? அதற்கு முன் எவ்வளவு மின்மாற்றிகள் வாங்கப்பட்டன? எதனால் அரசுக்கு இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டது? என்பது குறித்த அனைத்து உண்மைகளையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல், சோலார் (சூரியசக்தி) திட்ட முதலீடுகளில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. லஞ்சம் மற்றும் முறைகேடுகளைத் தடுத்தாலே மின்வாரியத்தின் கணிசமான நிதியைச் சேமிக்க முடியும். எனவே, கடந்த ஆட்சியில் மின்சாரத் துறையில் தனிநபர்கள் பயனடையும் வகையில் செய்யப்பட்ட ஊழல்களைத் துல்லியமாகப் பட்டியலிட்டு, விரைவில் ‘வெள்ளை அறிக்கை’யாக மக்கள் முன்னிலையில் சமர்ப்பிப்போம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் எச்சரித்தார்.

மின்வாரியத்தை சீரமைக்கும் நோக்கில் அடுத்த வாரம் இந்த வெள்ளை அறிக்கை வெளியாகும் என அமைச்சர் அறிவித்துள்ளது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version