சென்னை:

தமிழகத்தில் நிலவி வரும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, வரும் ஜூலை 19-ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலை மாவட்டங்களில் மழை:

குறிப்பாக, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சென்னை உள்ளிட்ட ஏனைய தமிழக உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

வெப்பநிலை நிலவரம்:

மழைக்கான வாய்ப்பு ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படலாம் என்றும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் லேசான அசௌகரியம் நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version