எடின்பர்க்: ஸ்காட்லாந்து நாட்டில் கருங்குருவிகள் (Blackbirds) திடீரென அதிக எண்ணிக்கையில் இறந்து கிடப்பதற்குக் கொடிய ‘உசுட்டு’ (Usutu Virus) வைரஸ் தொற்றுதான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டுச் சுகாதார மற்றும் வனவிலங்குத் துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட இந்த உசுட்டு வைரஸ், முதன்முதலில் கடந்த 1959-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் உசுட்டு ஆற்றுப் படுகையில் கண்டறியப்பட்டது. பறவைகள் மற்றும் கொசுக்கள் மூலமாகப் பரவக்கூடிய இந்த வைரஸ், தற்போது ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பறவைகளிடம் தீவிரமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, அங்குள்ள கருங்குருவிகள் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிப் பெருமளவில் உயிரிழந்து வருகின்றன.
இறந்த குருவிகளின் உடல்களை ஆய்வு செய்த ஸ்காட்லாந்து வனவிலங்குப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், பறவைகளின் நரம்பு மண்டலத்தை இந்த வைரஸ் முற்றிலுமாகப் பாதித்து, அவற்றின் மரணத்திற்கு வழிவகுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“ஸ்காட்லாந்தின் பல பகுதிகளில் கருங்குருவிகள் அசாதாரணமான முறையில் இறந்து வருவது கவலையளிக்கிறது. இந்த உசுட்டு வைரஸ் கொசுக்களின் மூலமாகவே பறவைகளுக்குப் பரவுகிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டுத் தோட்டங்கள் அல்லது பொது இடங்களில் பறவைகள் இறந்து கிடப்பதைக் கண்டால், அவற்றை வெறும் கைகளால் தொடக் கூடாது. உடனே அது குறித்து வனவிலங்குத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.”
மனிதர்களுக்கு ஆபத்தா? இந்த உசுட்டு வைரஸ் முதன்மையாகப் பறவைகளைத் தாக்கினாலும், அரிதான சில சூழ்நிலைகளில் கொசுக்களின் மூலம் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மனிதர்களுக்கு இந்தத் தொற்று ஏற்பட்டால் லேசான காய்ச்சல், தலைவலி, தோல் தடிப்புகள் ஏற்படலாம் என்றும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது கோடைக்காலம் என்பதால் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கும் சூழலில், தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் அகற்றுமாறும், பறவைகளுக்கு வைக்கும் தண்ணீர்க் தொட்டிகளைத் தினமும் சுத்தம் செய்யுமாறும் ஸ்காட்லாந்து நாட்டுச் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. உலக வெப்பமயமாதல் காரணமாக இத்தகைய ஆப்பிரிக்க வைரஸ்கள் ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


