செய்தி விவரம்:

சேலம்: சேலம் மாவட்டத்தில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில்களில் ஆடிப் பெருவிழா ஆண்டுதோறும் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஆடிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் நடும் விழா இன்று (சூலை 28) இரவு வெகுவிமர்சையாக நடைபெறுகிறது.

சேலத்தின் முதன்மை கோவிலான கோட்டை மாரியம்மன் கோவில், அம்மாப்பேட்டை மாரியம்மன் கோவில், குகை மாரியம்மன் கோவில், பொன்னம்மாப்பேட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற தலங்களில் இன்று இரவு பூசாரிகள் சிறப்பு பூஜைகள் செய்து, புனித நீர் தெளித்து கம்பங்களை நடுகின்றனர்.

பக்தர்கள் வழிபாட்டு ஏற்பாடுகள்: கம்பம் நடப்பட்ட நாள் முதல், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து கம்பத்திற்கு புனித நீர், பால், இளநீர் ஊற்றி சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். பூவோடு எடுத்தல், அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் மற்றும் பால்குட ஊர்வலம் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வரத் தொடங்குவர்.

விழாவை முன்னிட்டு கோவில் வளாகங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு, அனைத்து பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கம்பம் நடும் நிகழ்வையொட்டி இன்று இரவு சேலம் மாநகரப் பகுதிகளில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version