லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய லோக் தளம் (RLD) கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் உ.பி. மாநிலத் தலைவர் ராமசிஷ் ராய், தனது பதவியையும் கட்சியையும் ராஜினாமா செய்துள்ளார். பாஜகவின் கொள்கைகள் மற்றும் பிளவுபடுத்தும் அரசியலே தனது விலகலுக்கான காரணம் என அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
முக்கியம்சங்கள்
- திடீர் ராஜினாமா: தேர்தல் நெருங்கும் வேளையில் RLD கட்சியின் உ.பி. மாநிலத் தலைவர் ராமசிஷ் ராய் விலகல்.
- பாஜக மீது விமர்சனம்: ஆளும் பாஜகவின் பிளவுபடுத்தும் மற்றும் மதவாத அரசியலே தனது மனசாட்சியைத் தொந்தரவு செய்ததாகக் குற்றச்சாட்டு.
- கூட்டணிக்கு நெருக்கடி: ஜெயந்த் சௌத்ரி தலைமையிலான RLD கட்சிக்கு இச்சம்பவம் தேர்தல் களத்தில் முக்கியப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
செய்தி விவரம்
உத்தரப் பிரதேசத்தில் அடுத்தடுத்த மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய லோக் தளம் (RLD) கட்சியில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் உ.பி. மாநிலத் தலைவராகப் பதவி வகித்து வந்த ராமசிஷ் ராய், தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியின் தலைவர் ஜெயந்த் சௌத்ரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பாஜக தலைமையிலான கூட்டணி கடைபிடிக்கும் பிளவுபடுத்தும் அரசியல் மற்றும் சமூக நல்லிணகத்திற்கு எதிரான போக்குகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
சமூகத்தை மதம் மற்றும் சாதி ரீதியாகப் பிரிக்கும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் மாநிலத் தலைவர் ஒருவர் வெளிப்படையாகக் கட்சியை விட்டு வெளியேறி, கூட்டணி அரசின் மீது குற்றஞ்சாட்டியிருப்பது RLD கட்சித் தலைமைக்கு உத்தி ரீதியாகப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.


