சென்னை: வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராகத் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஏற்கவில்லை என்றால், தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினர் உடனடியாகப் பதவியைவிட்டு வெளியேறுவார்கள் என அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார் எச்சரித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், த.வெ.க. தரப்பிலிருந்து முதல்வர் விஜய்யை அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திப் பேசப்படுவது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த அவர் தனது இறுதியான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
அமைச்சர் ராஜேஷ் குமாரின் பேட்டியின் முக்கிய அம்சங்கள்:
- காங்கிரஸின் முகம் ராகுல் காந்தி: எங்களுடைய கட்சியைப் பொறுத்தவரை இந்தியாவுக்கும் சரி, எங்களுக்கும் சரி ராகுல் காந்திதான் ஒற்றை முகம். 2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் நாற்காலியில் அமர்வார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
- அமைச்சரவை பகிர்வு குறித்த எச்சரிக்கை: தவெக அரசுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்பதற்காகக் கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது. ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராகத் தவெக ஏற்காவிட்டாலும் அல்லது எங்களது கட்சித் தலைமை உத்தரவிட்டாலும், அடுத்த கணமே தவெக அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம்.
- கட்சியே முக்கியம்: அமைச்சர் பதவிகளைவிட எங்களுடைய கட்சிதான் எங்களுக்குப் பெரிது; தலைமை என்ன உத்தரவிடுகிறதோ அதையே முழுமையாகச் செயல்படுத்துவோம்.
தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசில் எழுந்துள்ள இந்த வெளிப்படையான கருத்து வேறுபாடு மற்றும் அமைச்சரின் எச்சரிக்கை தமிழக அரசியல் வட்டட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


