புதுடெல்லி: 2014-ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் சுமார் 152 தேர்வுத்தாள்கள் கசிந்துள்ளதாகக் கூறி, மத்திய அரசை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடுமையாகச் சாடியுள்ளார்.
நீட் (NEET) மற்றும் யுஜிசி-நெட் (UGC-NET) உள்ளிட்ட முக்கியப் போட்டித் தேர்வுகளில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில், கடந்த பத்தாண்டுகளில் தேர்வு முறைகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது வெறும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல என்றும், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 152-க்கும் மேற்பட்ட தேர்வுத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தேர்வு நடத்தும் அமைப்புகளில் நிலவும் கட்டமைப்பு தோல்விக்கு மத்திய கல்வி அமைச்சகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கல்வித் துறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், முறைகேடுகளைத் தடுக்கவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


