தென்காசி: பிரபல சுற்றுலாத் தலமான பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் என்ற வனத்துறையின் அறிவிப்பு, சுற்றுலாப் பயணிகளின் கடும் எதிர்ப்பு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பழைய குற்றால அருவிக்குத் தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், அருவிப் பகுதியை மேம்படுத்துவதற்குக் கட்டணமாக, குளிப்பவர்களிடம் தலா ரூ.20 வசூலிக்கப்படும் என்று வனத்துறை திடீரென அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே, இயற்கை தந்த கொடையான அருவியில் குளிப்பதற்குக் கட்டணமா எனச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் கிளம்பியது.
பல்வேறு தரப்பிலிருந்தும் போராட்டங்களும், கண்டனங்களும் எழுந்த நிலையில், வனத்துறை தற்போது இந்த முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தரப்பில் பேசுகையில், “பழைய குற்றால அருவி கட்டண நடைமுறை தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இதுதொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் முறையான கருத்துக்கள் கேட்கப்பட்டு, அவர்களின் ஆலோசனைக்குப் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று விளக்கமளித்துள்ளனர். வனத்துறையின் இந்த பின்வாங்கலால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர்.



