வெயில் காலத்தின் தாகத்தைத் தணிக்கும் நுங்கு, சுவைக்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்காகவும் பலரால் விரும்பப்படுகிறது. இது குறித்து டாக்டர் அருண்குமார் (குழந்தை நல மருத்துவர் & உணவு ஆலோசகர்) பகிர்ந்துள்ள தகவல்கள் இதோ:

1. நுங்கு உண்மையில் உடல் சூட்டைத் தணிக்குமா?

அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், நுங்கில் 85-90% நீர்ச்சத்து உள்ளது. கோடையில் உடலில் நீர்ச்சத்து குறையும்போது ஏற்படும் சிறுநீர் எரிச்சல், வியர்க்குரு போன்ற “உடல் சூடு” அறிகுறிகளை, இதில் உள்ள நீர்ச்சத்து தணிக்கிறது. நேரடியாக உடல் சூட்டைச் சரி செய்யாவிட்டாலும், நீர்ச்சத்து குறைபாட்டைச் சீராக்கி நிவாரணம் அளிக்கிறது.

2. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் தாராளமாக 1 அல்லது 2 நுங்கு சாப்பிடலாம். 100 கிராம் நுங்கில் வெறும் 10 கிராம் மாவுச்சத்து (Carbohydrates) மட்டுமே உள்ளது. இது நாம் அன்றாடம் சாப்பிடும் இட்லி, தோசையை விடக் குறைவுதான். ஆனால், கிலோ கணக்கில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

3. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு உகந்ததா?

நிச்சயமாக! எடை குறைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பழம்.

  • குறைந்த கலோரிகள்: 100 கிராமில் 40 கலோரிகள் மட்டுமே உள்ளன.
  • மிதமான மாவுச்சத்து: 4-5 நுங்கு சாப்பிட்டாலும் மாவுச்சத்து அதிகரிக்காது.
  • வயிறு நிறையும்: நீர்ச்சத்து அதிகம் என்பதால் சீக்கிரம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும்.

4. மற்ற பழங்களை விட நுங்கு அதிக சத்துள்ளதா?

இல்லை. நுங்கின் சிறப்பம்சமே அதன் நீர்ச்சத்து தான். கொய்யாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி-யோ அல்லது வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமோ இதில் கிடையாது. எனவே, சத்துக்காக மற்ற பழங்களுக்கு மாற்றாக இதைச் சொல்ல முடியாது; ஆனால் கோடைக்கு ஏற்ற சிறந்த பழம் என்பதில் மாற்றமில்லை.

5. சருமத்திற்குப் பயன்படுத்தலாமா?

வியர்க்குரு அல்லது முகப்பரு உள்ள இடங்களில் நுங்கின் நீரைத் தடவலாம். கற்றாழை அளவிற்குத் தீவிரம் இல்லாவிட்டாலும், இதில் உள்ள நீரை ஈர்த்து வைக்கும் பண்பு (Hydrating property) தோல் வறட்சியடையாமல் இருக்கவும், வெடிப்புகளைத் தவிர்க்கவும் உதவும்.

Share.
Leave A Reply

Exit mobile version