புதுடெல்லி: அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் தொடர்களில் இருந்து, இந்திய அணியின் இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக அதிரடியாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மாற்று வீரராக சூரியாஷ் ஷெட்கே (Suryansh Shedge) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியின் போது, நிதிஷ் குமார் ரெட்டிக்கு இடது தொடைப் பகுதியில் (Quadriceps) கடுமையான தசைப்பிடிப்பு மற்றும் அசௌகரியம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், காயம் தீவிரமாக இருப்பதால் அவர் சில வாரங்கள் தீவிர ஓய்வெடுக்க வேண்டும் என பிசிசிஐ (BCCI) மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது.
இதன் காரணமாக, ஜூன் 26 அன்று பெல்ஃபாஸ்டில் தொடங்கவுள்ள அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகிய இரண்டிலிருந்தும் அவர் முழுமையாக விலகியுள்ளார்.
மாற்று வீரராக சூரியாஷ் ஷெட்கே சேர்க்கை
வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான நிதிஷ் ரெட்டியின் விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாகக் கருதப்பட்டாலும், சமீபத்தில் இலங்கை மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் ‘இந்தியா ஏ’ அணிக்காக 5 போட்டிகளில் 147 ரன்கள் குவித்து அசத்திய 23 வயதான மும்பை பேட்டிங் ஆல்-ரவுண்டர் சூரியாஷ் ஷெட்கேவுக்கு தற்போது இந்திய அணியில் முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து தொடரில் பங்கேற்பதற்காக சஞ்சு சாம்சன், அக்சர் படேல் மற்றும் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட இந்திய வீரர்களின் முதல் குழு ஏற்கனவே சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய இளம் படை இந்தச் சவாலான வெளிநாட்டுத் தொடர்களை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.


