ராமநாதபுரம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியதாக வி.கே. சசிகலா அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
“தமிழக மக்களை நான் ஏமாற்ற மாட்டேன். பேசாமல் இருப்பது தொண்டர்களுக்கும் மக்களுக்கும் துரோகம் ஆகிவிடும். அதனால் தீர்க்கமான முடிவை எடுத்துள்ளேன். தமிழகத்திற்காக ஒரு புதிய திராவிடக் கட்சியை ஆரம்பிக்கிறோம்” என்று சசிகலா தெரிவித்தார்.
புதிய கட்சி அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் செயல்படும் எனவும் அவர் கூறினார். கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களில் மூவரின் உருவம் பொறித்த கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார். கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதிமுக பிளவுகளின் பின்னணி
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக இருந்தார். ஆனால் 2017ல் சிறை தண்டனைக்கு பிறகு, கட்சியின் கட்டுப்பாடு எடப்பாடி பழனிசாமி கைக்கு சென்றது. பின்னர் டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
2021ல் சிறையிலிருந்து வெளியே வந்தபோதும், சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக புதிய கட்சி தொடங்கும் முடிவை அவர் எடுத்துள்ளார்.
தேர்தல் களம் சூடுபிடிக்கும்
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சசிகலாவின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றத்துக்கு வழிவகுக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதிமுக வாக்கு வங்கியில் தாக்கம் ஏற்படுத்துமா என்பது அடுத்த கட்ட அரசியல் விவாதமாக மாறியுள்ளது.


