ஈரோடு:

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், “தமிழக முதலமைச்சராக விஜய் இருக்கும் வரை கர்நாடகாவால் மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாது” என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நேரடிப் பேச்சுவார்த்தை பின்னடைவா?

காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணைப் பிரச்சனை தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக முதலமைச்சர் விஜய் பெங்களூரு செல்லவிருப்பதாகக் தகவல்கள் வெளியாகின. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் இதற்கு விளக்கம் அளித்தார்.

“காவிரிப் பிரச்சனை எழும்போதெல்லாம் தமிழக முதல்வரின் கடிதங்களுடன் பிரதிநிதிகள் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் அமைச்சர்கள் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனவே, முதல்வர் நேரில் சென்று சந்திப்பது எந்தவிதத்திலும் பின்னடைவு ஆகாது” என்று அவர் கூறினார்.

“ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது”

தொடர்ந்து பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்ட விடாமல் தமிழகத்தின் நீர் உரிமையைப் பாதுகாப்பதே முதலமைச்சர் விஜய்யின் இலக்கு என்று குறிப்பிட்டார்.

“தமிழகத்தை விஜய் ஆட்சி செய்யும் வரை மேகதாது அணை திட்டத்திற்காக ஒரு செங்கல்லைக் கூட கர்நாடக அரசால் எடுத்து வைக்க இயலாது. தமிழக மக்களின் குடிநீர் தேவையும், விவசாயிகளின் பாசன உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படும்” என்று செங்கோட்டையன் உறுதியளித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version