பெங்களூரு:

சர்ச்சைக்குரிய மேகதாது அணை திட்டமானது தென்னிந்தியாவின் இதயம் போன்றது என்றும், இத்திட்டத்தால் கர்நாடகாவை விட அண்டை மாநிலமான தமிழ்நாட்டிற்கே அதிக பயன் கிடைக்கும் என்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கர்நாடக சட்ட மேலவை தேர்தலுக்காக வாக்களித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் டி.கே. சிவகுமார், மேகதாது திட்டம் குறித்து தமிழக அரசின் எதிர்ப்பு மற்றும் டெல்லி நகர்வுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

குடிநீருக்கான திட்டம் மட்டுமே:

மேகதாது திட்டம் எனது இதயத்திற்கு நெருக்கமானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கும் முக்கியமானது என்று குறிப்பிட்ட சிவகுமார், “இந்த அணையிலிருந்து பாசனத்திற்காக ஒரு வாலி தண்ணீர் கூட நாங்கள் பயன்படுத்த மாட்டோம். பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே இந்த நீர் பயன்படுத்தப்படும். பெங்களூரின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது, நமக்கு காவிரி மட்டுமே ஒரே ஆதாரம்” என்றார்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177 டி.எம்.சி தண்ணீரை வழங்க கர்நாடகா தயாராக உள்ளதாக உறுதியளித்த அவர், உபரி நீர் கடலில் கலப்பதைத் தடுத்து சேமிக்கவே இந்த அணை உதவும் என்றார். கடந்த ஆண்டில் மட்டும் 400 டி.எம்.சிக்கும் அதிகமான உபரி நீர் வீணாக கடலில் கலந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

“மேகதாது திட்டம் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களின் நலனுக்கானது. சொல்லப்போனால், இதனால் கர்நாடகாவை விட தமிழ்நாட்டிற்கே அதிக பலன்கள் கிடைக்கும். இந்த விவகாரத்தில் அரசியல் செய்யத் தேவையில்லை.” — டி.கே. சிவகுமார், கர்நாடக முதலமைச்சர்

பேச்சுவார்த்தைக்குத் தயார்:

தமிழக அரசு இந்த விவகாரத்தைப் பிரதமரிடம் கொண்டு செல்வது குறித்த கேள்விக்கு, “அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக இதில் அரசியல் செய்து வருகிறார்கள், நான் அதில் தலையிட விரும்பவில்லை. நாம் அனைவரும் ஒரே நாடு, ஒரே மக்கள். காவிரி நீரைத் தான் நாம் அனைவரும் குடிக்கிறோம். எனவே, இது குறித்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் எப்போது வேண்டுமானாலும் பேச நான் தயாராக உள்ளேன்” என்று கூறினார்.

அண்மையில் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் கோரி கர்நாடக அரசு மனு அளித்திருந்த நிலையில், தமிழக அரசு இதனை சட்டரீதியாகத் தொடர்ந்து எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version