சென்னை: தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்து விவகாரம் குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) முதன்முறையாக மௌனம் கலைத்து மிகவும் ஆவேசமாகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கையில், “கடந்த சில நாட்களாக என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசப்படும் விஷயங்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இத்தனை நாட்கள் நான் எதற்கும் மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததற்காக இப்போது வருத்தப்படுகிறேன். நான் மிகவும் சாதுவானவன் என்பதால், என்னை யார் வேண்டுமானாலும் சீண்டலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், தனது சினிமா வாழ்க்கை குறித்து முக்கிய முடிவை அறிவித்துள்ள அவர், “தற்போது நீதிமன்றத்தில் இருக்கும் என் விவாகரத்து வழக்கின் இறுதித் தீர்ப்பு வந்து, எனக்கு முழுமையான விவாகரத்து கிடைக்கும் வரை நான் புதிய திரைப்படங்கள் எதிலும் நடிக்கப் போவதில்லை” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஜெயம் ரவியின் இந்தத் திடீர் முடிவு மற்றும் ஆவேசமான அறிக்கை திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


