சென்னை: ‘உப்பிலா’ (Uppena) திரைப்படப் புகழ் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பெத்தி’ (Peddi). இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

விருத்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த பான்-இந்தியத் திரைப்படம் வரும் ஜூன் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இதன் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் புதிய பாடல் ஒன்று வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

ஆட்டம்போட வைக்கும் ‘HELLALLALLO’:

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘HELLALLALLO’ என்ற அதிரடியான குத்துப்பாடலின் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் அதிரடி துள்ளல் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலில், பாலிவுட் இளம் நடிகை ஜான்வி கபூர் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை சுருதிஹாசன் ஆகியோர் இணைந்து நடனமாடியுள்ளனர்.

நடிகை சுருதிஹாசன் இத்திரைப்படத்தில் ஒரு சிறப்புப் பாடலுக்கு மட்டும் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். போஸ்கோ மார்டிஸ் நடன அமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலில், ஜான்வி மற்றும் சுருதிஹாசன் இருவரின் எனர்ஜிட்டிக்கான நடன அசைவுகள் மற்றும் ஸ்கிரீன் பிரசன்ஸ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

வைரலாகும் வீடியோ:

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் முற்றிலும் மாறுபட்ட வெஸ்டர்ன் மற்றும் ஃபோக் கலந்த பீட்ஸ், சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் தளங்களில் தற்போதே ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளது. ஜூன் மாதம் படம் வெளியாக உள்ள நிலையில், இந்த விறுவிறுப்பான பாடல் படத்திற்கான பிசினஸ் மற்றும் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version