சென்னை: அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் உள்கட்டமைப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவது தற்செயலானது தானா, அல்லது திட்டமிட்டுத் தனியார் பள்ளிகளின் வணிக வளர்ச்சிக்காக உருவாக்கப்படும் திட்டமிட்ட சூழலா என்ற சந்தேகம் எழுவதாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கியம்சங்கள்
- அரசு பள்ளிகள் வீழ்ச்சி: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதும், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருப்பதும் கவலை அளிப்பதாக அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.
- தனியார் பள்ளிகள் வணிகம்: கல்வி என்பது வணிகமயமாக்கப்பட்டு வருவதாகவும், இதன் பின்னணியில் தனியார் கல்வி நிறுவனங்களின் லாப நோக்கம் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
- அரசுக்குக் கோரிக்கை: உடனடியாக அரசு தலையிட்டு அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தத் தேவையான கட்டமைப்பு வசதிகளையும், ஆசிரியர் நியமனங்களையும் விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி விவரம்
தமிழகத்தில் கல்வித்துறையின் தற்போதைய நிலை குறித்துப் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கல்விக்காகச் செயல்பட வேண்டிய அரசுப் பள்ளிகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் முடங்கி வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “கிராமப்புற அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இன்றியும், அடிப்படை வசதிகள் இன்றியும் தவிக்கும் சூழல் நிலவுகிறது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே தங்களது குழந்தைகளைக் கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் சேர்க்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். இது தற்செயலாக நடப்பது போல் தெரியவில்லை; மாறாகத் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும், கல்வி வணிகத்தை ஊக்குவிப்பதற்காகவும் திட்டமிட்டு உருவாக்கப்படும் சூழலாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


